தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகத்தின் இணையதளத்திற்கான அமைச்சரின் செய்தி….

 

ஒரு நாடு வளர்ச்சியடையவும், அமைதியை மற்றும் செழிப்பை பேணவும், அங்கு வாழும் மக்களிடையே அமைதியும் நல்லிணக்கமும் நிலவுவது அவசியம். இலங்கை போன்ற பல இன, பல மதங்களைச் சார்ந்த சமூகங்களைக் கொண்ட ஒரு நாட்டில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் இல்லாமல் எதிர்கால எதிர்பார்ப்புக்களை ஈடேற்ற முடியாது.

 

இன அல்லது மத பேதங்களின்றி மக்கள் ஒரே குறிக்கோளுடன் அணிதிரண்டு ஒரு தேசமாக முன்னேறிச் செல்லும் நோக்கத்துடன் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளனர்.

 

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக கடந்த காலங்களில் பரவலாக கூறப்பட்ட போதிலும் அந்த கூற்றுக்கள் வெறும் அறிக்கைகளாக மட்டுமே இருந்த காரணத்தினால், தேசிய ஒற்றுமையையும் சமய சகவாழ்வினையும் நடைமுறை யதார்த்தமாக்கும் ஒரு வேலைத்திட்டத்தின் தேவை இன்று முன்னெப்போதும் இல்லாத அளவை விட அதிகமாக உணரப்படுகிறது.

 

இனங்களுக்கிடையே நிலவும் நம்பிக்கையின்மையும் சந்தேகமும் அந்த இனங்களுக்கிடையே காணப்பட வேண்டிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் தடையாக இருப்பதால் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைக்கும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இனங்களுக்கிடையே நிலவிய சந்தேகம் மற்றும் நம்பிக்கையின்மை காரணமாக சபிக்கப்பட்ட முப்பது வருட யுத்தம் உள்ளிட்ட பல துன்ப-துயர நிகழ்வுகளுக்கு நாம் முகம்கொடுக்க வேண்டியிருந்தது.

 

அனைத்து மக்களும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து ஒருமித்த மனதுடன் செயற்பட வேண்டும் என வடக்கு – தெற்கு என்ற வேறுபாடின்றி உறுதிப்படுத்தியுள்ளனர் என்பது தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையிலிருந்து தெளிவாகிறது. அந்த நம்பிக்கையைப் பாதுகாப்பதற்காக நிலையான நல்லிணக்க வேலைத்திட்டமொன்றினை செயற்படுத்துவதே எங்கள் முதன்மையான நோக்கமாகும்.

 

தேசிய மற்றும் சமய அடையாளங்களுக்கு மதிப்பளித்து பன்முகத்தன்மையைப் புரிந்துகொண்டு அனைத்து மக்களும் சமாதானத்துடன் ஒன்றாக வாழ்வதற்குத் தேவையான அடிப்படைச் சூழலை உருவாக்கிக் கொடுத்து ஒவ்வொருவரினதும் கலாசார மற்றும் அரசியல் சுதந்திரத்தை உறுதி செய்யக்கூடிய, நல்லிணக்கத்தைப் பாராட்டுகின்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான தலைமைத்துவத்தையே தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் போன்ற நிறுவனங்கள் மூலம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

மனித உரிமைகள், சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் சமத்துவத்தை மதிக்கும் அத்துடன் இனம், மதம், தேசியம், மொழி, சாதி ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டாத ஒரு சமூக சூழலை உருவாக்குவதற்காக நாட்டை வழிநடத்துவதே இந்த அலுவலகத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.

 

சமய சகவாழ்விற்கும், தேசிய ஒற்றுமைக்கும் தீங்கு விளைவிக்கும் மற்றும் தடையாக அமையும் எந்தவொரு செயலுக்கும் இடமளிக்கக்கூடாது என்பதுடன், பாகுபாடு இன்றி அனைவரது உரிமைகளும் பாதுகாக்கப்படும் வகையில் செயற்படக்கூடிய ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப நாம் திடசங்கற்பம் கொள்ளுதல் வேண்டும்.

 


சட்டத்தரணி, ஹர்ஷண நாணாயக்கார
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு