இலங்கையில் ஆயுத மோதல் முடிவடைந்த பதினாறாவது ஆண்டு நிறைவிற்கான ஒரு சிறப்பு நிகழ்ச்சி.

 

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் ஆளுநர் குழு, இலங்கையில் ஆயுத மோதல் முடிவடைந்து பதினாறு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு 2025 மே 19 ஆம் திகதி காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை அலுவலக வளாகத்தில் ஒரு விசேட நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வின்போது, அலுவலகத்தின் ஆளுநர் குழுவால் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மும்மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வுடன் இணைந்து, ஆரோக்கியமான சமூகம் மற்றும் வளமான உலகத்திற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டதுடன், சமாதான தீபங்களும் ஏற்றப்பட்டன. நாடு முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் சகவாழ்வு சங்கங்களின் உறுப்பினர்கள் இணையவழி மூலம் பிரதான நிகழ்வுடன் இணைந்து கொண்டனர். இந்நிகழ்வைத் தொடங்கி வைத்து உரையாற்றிய நிறுவனத்தின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் விஜித் ரோஹான் அவர்கள், வளமான சமூகம் மற்றும் ஆரோக்கியமான உலகம் குறித்து ஆழமான பகுப்பாய்வை வழங்கினார். விளக்கேற்றி உறுதிமொழி எடுத்த பின்னர், பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்து ஆரோக்கியமான சமூகத்திற்கான தமது ஆசீர்வாதங்களை வழங்கினர். இந்நிகழ்வில் நீதி அமைச்சின் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீா் முலப்பர் அவர்கள், மேலதிக செயலாளர் (தேசிய ஒருமைப்பாடு) கே. மகேசன் அவர்கள், மேலதிக செயலாளர் (நிர்வாகம்) திருமதி சமன்குமாரி அவர்கள், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் ஆளுநர் குழு உறுப்பினர்கள், நஷ்டஈடு அலுவலகம், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், நீதி அமைச்சின் தேசிய ஒருமைப்பாட்டுப் பிரிவு மற்றும் கணக்காய்வுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பங்குதாரர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் உதவிப் பணிப்பாளர் எச்.எஸ். லக்மால் அவர்கள் வருகை தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த பின்னர் நிகழ்வு நிறைவடைந்தது.