ஈதுல் -பித்ர்” ரமலான் பண்டிகையை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சரின் வாழ்த்துச் செய்தி.
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
ரமலான் நோன்புப் பெருநாள் என்பது, அல்லது ” ஈதுல்-பித்ர் ” இஸ்லாமிய பக்தர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான மத ரீதியான கொண்டாட்டமாகும். இது ரமலான் நோன்பு மாதத்தின் முடிவைக் குறிக்கும் ஒரு பண்டிகையாகும். ரமலான் நோன்பு (சவ்ம்) என்பது இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாவதுடன், இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாகும். உலக மக்களுக்கு நல்வழிகாட்ட, அல்லாஹ்விடமிருந்து ஒரு நற்செய்தியாக,இந்த ரமலான் நோன்பு காலத்தில்தான் புனித நூலான அல்- குர்ஆன் முதன்முதலில் நபிகள் நாயகம் அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது.
ரமலான் மாதத்தில், முஸ்லிம்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை கிட்டத்தட்ட 30 நாட்கள் உணவு மற்றும் பானங்களைத் தவிர்த்து உபவாசம் இருப்பார்கள். இந்த ரமழான் மாதத்தில், முஸ்லிம்கள் நோன்பு, பிரார்த்தனை மற்றும் தானம் மூலம் தங்கள் மத பக்தியையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறார்கள். இது சுயக்கட்டுப்பாடு, ஒழுக்கம், கடவுள் பக்திக்கு மற்றும் நெருக்கம், மனத் தூய்மை, தாராள மனப்பான்மை, இரக்கம், உடல் ஆரோக்கிய மேம்பாடு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு போன்ற முக்கியமான குணங்களை வளர்த்துக் கொள்கின்றனர். அதன்படி, இந்த ரமலான் நோன்பு மாதம் முடிந்த பிற்பாடு, புதிய பிறையை காணும் நாள், ஈத் நாட்கள் (ரமலானின் முடிவு) பண்டிகை நாளாகக் கருதப்படுகிறது. அன்று காலை முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகைக்காகக் கூடி , அவர்கள் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார்கள்.
நமது நாட்டில் உள்ள பல்வேறு மத மற்றும் கலாச்சார சமூகங்களுக்கிடையில் சகவாழ்வையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்பவும் ரமலான் உதவுகிறது.. இது ஒரு மத கொண்டாட்டம் மட்டுமல்ல, தனிப்பட்ட மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான நேரமும் கூட. இதிலிருந்து வெளிப்படும் சகவாழ்வு, ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கையின் மதிப்புகள், நமது புதிய அரசாங்கத்தின் “ஒரு வளமான நாடு – ஒரு அழகான வாழ்க்கை” என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதில் அடிப்படை பலமாக இருக்கும் என்பது எனது நம்பிக்கையாகும்.
அத்துடன் மத சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் அனைத்து இனக்குழுக்களிடையேயும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு உறுதிப்பூண்டுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இலங்கை முஸ்லிம் சகோதரர்களால் கொண்டாடப்படும் முதல்” ஈதுல்-பித்ர் ” பண்டிகையாகும் . இந்த அற்புதமான ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம் பக்தர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
ஈதுல் பித்ர் பண்டிகை அனைத்து மக்களுக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டுவரும் செழுமைமிக்க ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
முனீர் முலாஃபர்
தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர்