ஈத் அல்-இப்தார் விழா

சட்டங்கள், ஒழுங்குவிதிகள் இருப்பதால் மாத்திரம் ஒரு நாட்டில் வாழும் இனங்களுக்கிடையில்  ஒற்றுமை, சமய சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பிவிட முடியாது. அதற்காக சகல இனங்களையும், மதங்களையும் ஒன்றிணைத்த நடைமுறைச்சாத்தியமான வேலைத்திட்டமொன்றினை அமைப்பது அவசியமாகும். அதற்கமைவாக தேசிய மத ஐக்கியத்தை கட்டியெழுப்பும் நடைமுறைச்சாத்தியமான வேலைத்திட்டமொன்று நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்,  ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் கீழுள்ள தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன் மற்றுமொரு படிமுறையாக தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தினால் முஸ்லிம் மக்களின் புனித ரமழான் நோன்புக் காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்புப் பெருநாள் நிகழ்வு சர்வ மதத் தலைவர்களின் பங்கேற்புடன், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் தலைமையில் நேற்று (26) பிற்பகல் நாவல ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது.

உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றி இணைந்து பணியாற்றுதல், மற்றவரின் உணர்வுகளை உணர்ந்து செயல்படுதல், ஒருவருக்கு ஒருவர் உதவுதல் போன்றவற்றை புனித ரமழான் நோன்பு காலத்தில் நோன்பாளிகள் செய்து வருகின்றனர்.

சங்கைக்குரிய கலாநிதி கலகம தம்மரன்சி தேரர், வணக்கத்திற்குரிய கலாநிதி பாபு சர்மா குருக்கள், கலாநிதி அல்ஹாஜ் ஹசன் மௌலானா மௌலவி, அருட்தந்தை கலாநிதி நிஷான் குரே ஆகியோர் இந்நிகழ்வின் போது விசேட உபதேசங்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவர் சரித் மரம்பே அவர்கள், நாவல முஸ்லிம் பள்ளிவாசல் தலைவர் மௌலவி ஹனிபா ஹாஜியார் அவர்கள் உட்பட பெருந்திரளான நோன்பாளிகளும் கலந்துகொண்டிருந்தனர்.