தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் உள்ளிட்ட மூன்று சட்டமூலங்களுக்கு துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம்

தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகம், மத்தியஸ்த சபை (திருத்த) சட்டமூலம், மத்தியஸ்திலிருந்து விளைகின்ற சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்றங்கீகரித்தலும் மற்றும் வலுவுறுத்தலும் சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்களுக்கும் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தலைமையில் கடந்த 02ஆம் திகதி கூடியபோதே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைஞர் திணைக்களம், தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் மற்றும் மத்தியஸ்த சபைக்கான ஆணைக்குழு போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இங்கு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மற்றும் அதன் உறுப்பினர்களை நியமித்தல் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்படி, இந்த அலுவலகத்திற்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் பரிந்துரையை நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சருக்கு அறிவிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், கிராம மட்டங்களில் சகவாழ்வு மையங்களை அமைப்பது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கிராம மட்டத்தில் முரண்பாடுகள் ஏற்படும்போது அவற்றை விரைவில் அறிந்து தீர்ப்பதற்குத் தயார்படுத்துவதே இந்த அலுவலகத்தின் நோக்கமாக இருப்பதாக அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை, மத்தியஸ்த சபை (திருத்த) சட்டமூலம் மற்றும் மத்தியஸ்திலிருந்து விளைகின்ற சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்றங்கீகரித்தலும் மற்றும் வலுவுறுத்தலும் சட்டமூலம் என்பனவும் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கௌரவ கெவிந்து குமாரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.